Tuesday, 18 October 2016

மூளையைப் பலமாக்கும் மஞ்சள்

மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர்.

இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்’ இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, `மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன், அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றலை இழக்கிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்கும் சக்தியை பெற்றிருப்பது எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சளை சமையலில் பயன்படுத்தும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும

அல்லிப் பூ:

அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும்

இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.

சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.

மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு

தாகந் தணியும் தழலகலும் – வாகான

மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்

அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)

உடல் சூடு தணிய:

உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.

நீரிழிவு பாதிப்பு நீங்க:

சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.

இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.

சிறுநீர் எரிச்சல் குறைய:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.

தாகம் தணிய:

சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.

செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்:

செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்

-அகத்தியர் குணபாடம்.

கண்ணோய்கள் நீங்க:

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.

இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

இரத்தம் சுத்தமாக:

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.